2 கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது
நாகர்கோவிலில் இரண்டு கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் குமாரி (67) கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து 10 பவுன் நகை மற்றும் ரூபாய் 35 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக குமாரி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சேர்ந்த தவசி பால் என்ற இசக்கியல் (37) சுத்தமல்லியை சேர்ந்த செண்பகராஜன் (35) ஆகியோர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. தொடர்ச்சியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்பி சுந்தரவதனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் கோட்டார் போலீசார் தவசிபால், செண்பகராஜ் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.