மாப்பிள்ளையூரனியில் 20 நாட்களாக மழை நீர் தேக்கம்: மக்கள் போராட்டம்
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பகுதியில் 20 நாட்களாக மழைநீரை அகற்றாத மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
அதேபோன்று தூத்துக்குடி மாநகரை ஒட்டி உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 20 நாட்களாக மழைநீரை அகற்றாத மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து வடக்கு சோட்டையன் தோப்பு, குமரன் நகர் பகுதி மக்கள் தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக வடக்குசோட்டையன் தோப்பு மற்றும் குமரன் நகர் பகுதிகளில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து அசுத்த நீராக மாறி தொற்று நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆளுங்கட்சியினர் யாரும் இதுவரை வந்து சந்திக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்கள்.
இதையடுத்து தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.