போச்சம்பள்ளி வாரசந்தையில் 20 டன் துவரை விற்பனை - துவரை வாங்க குவிந்த பெண்கள்
போச்சம்பள்ளி வாரசந்தையில் 5 மாத பயிரான துவரை சாகுபடியில் 20 டன் துவரை விற்பனையானது.
Update: 2024-02-25 09:03 GMT
போச்சம்பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை சந்தை கூடுவது வழக்கம். இங்கு தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுகிறது. திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இச்சந்தையிலே வாங்கும் அளவிற்கு கிடைக்கிறது. இன்று சந்தைக்கு வந்த மக்கள் வீட்டுக்கு தேவைக்கு ஓராண்டிற்கான மளிகை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்தனர். இதனால் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக துவரை வாங்குவதற்கு போட்டி போட்டு வாங்கினர். இதனை நன்கு காய வைத்து பதப்படுத்தி வைத்து கொண்டு ஆண்டு முழுவதும் சமையலுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் துவரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 5 மாத பயிரான துவரை சாகுபடி செய்ய விவசாயிகள் புரட்டாசி மாதம் உழவு செய்து விதைக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ வரை விதைக்கின்றனர். கடந்தாண்டு துவரை விதைப்பு பணி நடைபெற்ற போது மழை குறைந்ததாலும், தொடர்ந்து பனியின் தாக்கம் குறைவாக இருந்ததாலும் மகசூல் 20 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விதைப்பின் போது போதிய மழை இல்லாததால் போச்சம்பள்ளி, மத்தூர், செல்லம்பட்டி, சந்தூர், ஓலைப்பட்டி, பாளேத்தோட்டம், கொடாமண்டப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வழக்கதைவிட 20 சதவீதம் மகசூல் குறைந்துள்ளது. தற்போது காய்கள் முதிர்ச்சி அடைந்து அறுவடை தொடங்கி உள்ளது. இன்று சந்தையில் விவசாயிகள் துவரை பயிர்களை மூட்டை கணக்கில் விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்தனர். இதனால் இன்று 20 டன் துவரை விற்பனையானது. கிலோ துவரை 118க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.