தஞ்சாவூரில், 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த, நிதி நிறுவன உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆர்சுத்திப்பட்டை சேர்ந்த ராஜசேகர் (54), இவர் சூரியா பேங்கர்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில், நார்த்தேவன்குடிக்காட்டு பகுதியைச் சேர்ந்த, கட்டிட காண்டிராக்ட் வேலை பார்த்து வரும் ராஜேந்திரன் என்பவர் தான் சேமித்து வைத்திருந்த 28 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை, ராஜசேகர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில், அவசரத் தேவைக்காக, ராஜேந்திரன் தனது முதலீடு பணத்தில் இருந்து, 6.75 லட்சம் ரூபாயை எடுத்து விட்டார். பிறகு, கடந்த 2024 ஆகஸ்ட் 18 ஆம் தேதி, ராஜேந்திரன் நிதி நிறுவனத்தில் உள்ள, மீதம் 22 லட்சம் ரூபாயை ராஜசேகரிடம் கேட்டுள்ளார். அப்போது ராஜசேகர் பணத்தை தர மறுத்து மிரட்டியுள்ளார். தொடர்ந்து பலமுறை ராஜேந்திரன் பணத்தை கேட்டும், ராஜசேகர் தரவில்லை. இது குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, ராஜேந்திரன், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கரூரில் மறைந்திருந்த ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.