நூதன முறையில் மாடு திருடி அடிமாட்டுக்கு விற்பனை: 3பேர் கைது

ஆண்டிபாளையம் பகுதியில் நூதன முறையில் மாடு திருடி அடிமாட்டுக்கு விற்று வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2024-04-26 13:47 GMT

மாடு திருட்டில் ஈடுபட்டவர்கள்

திருச்செங்கோடு ஒன்றியம் ஆண்டிபாளையம் பகுதியில் வீடுகளில் இருந்து மாடுகள் தொடர்ந்து திருட்டு போவதாக வந்த தகவலை அடுத்து ஊரக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருச்செங்கோடு அருகே ஊரக போலீசார் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில், காவலர்கள் ரமேஷ்,

சரவணன், கோபால் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி ஆட்டோவை சோதனைக்காக நிறுத்திய போது, அதிலிருந்த ஓட்டுநர் இறங்கி தப்பி ஓட முயற்சிக்கவே, அவரைப்பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது, அவர்கள் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை சேர்ந்த கவினேஷ் என்பதும்,

அவரது நண்பர்கள் பழனிச்சாமி மற்றும் காந்தி மூவரும் சேர்ந்து கிராமப்புறங்களில் மாட்டு எரு வாங்குபவர்கள் போல் சென்று, கிராமங்களை நோட்டமிட்டு, பிறகு இரவு நேரங்களில், கட்டுத்தரைகளில் கட்டிவைக்கப்பட்டிருந்த, மாடுகளை கவினேஷ் உடைய மினி ஆட்டோவில் ஏற்றி சென்று கேரள மாநிலத்தைச் சார்ந்த அடிமாட்டு தரகர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

நேற்றிரவு கூட திம்மராவுத்தம்பட்டி பகுதியில் ஜெயமணி என்பவருக்கு சொந்தமான மூன்று மாடுகளை பிடித்து அடிமாட்டிற்கு விற்றுவிட்டு வந்ததாகவும், அந்த பணத்தை வைத்து கவினேஷ் மினி ஆட்டோவினுடைய கடனை அடைத்ததாகவும், தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு ஊரக காவல் ஆய்வாளர் தீபா உத்தரவின் பேரில், துணை ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்ததுடன்,

மாடு கடத்தலுக்கு பயன்படுத்திய மினி ஆட்டோவையும் பறிமுதல் செய்து, மூவரையும் திருச்செங்கோடு குற்றவியல் நீதிபதியிடம் ஆஜர் படுத்தி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டதை அடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News