திருட்டு வழக்கில் கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் உள்ள வீடுகளில் திருடிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. சமீபத்தில் அருமனை அருகே உள்ள காரோடு பகுதியில் திருமணம் நடைபெற இருந்த வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடி செல்லப்பட்டன. திருட்டில் ஈடுபட்ட கும்பலை குடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அருமனை போலீசார் ரோந்து பணியில் இருக்கும் போது மஞ்சாலுமூடு சந்திப்பில் சந்தேகப்படும்படியாக நின்ற நபர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது மாராயபுரம் காப்புக்காடு பகுதி சேர்ந்த மகேந்திர குமார் (47) என்பவரை பிடித்து விசாரித்த போது, அவர் திற்பரப்பு பகுதி சேர்ந்த அச்சுதன் மகன் ஜெகன் (37) என்பவருடன் சேர்ந்து திருடியதும், மேலும் மகேந்திரகுமார் தான் திருடியதை மனைவி நிர்மலா (43) இடம் பணத்தை கொடுத்து அதை அவர் வங்கியில் சேமித்து வைத்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து மகேந்திர குமார், நிர்மலா, ஜெகன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் மகேந்திர குமார் ஜெகன் ஆகியோர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏழு திருட்டு வழக்குகள் ஏற்கனவே உள்ளன. அவர்களிடம் இருந்து ரூபாய் 15 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.