பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை
மேல்மலையனூர் அருகே பணம் கொடுக்க மறுத்த பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா பெரியநொளம்பை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி படவேட்டாள் (வயது 55). பருத்திபுரம் கூட்டுசாலையை சேர்ந்தவர் முன்னாபாய் மகன் சாதிக்பாஷா (27). இவர் கடந்த 4.3.2023 அன்று இரவு 10.30 மணியளவில் குடிபோதையில் படவேட்டாள் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த அவரிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்துள்ளார்.
அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சாதிக்பாஷா, படவேட்டாளை சாதி பெயரை சொல்லி திட்டி மானபங்கப்படுத்தியதோடு கழுத்தை நெரித்து கையால் அவரது கண்களில் குத்தினார். இதில் காயமடைந்த படவேட்டாள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். வாலிபருக்கு சிறை இச்சம்பவம் குறித்து அவர், அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சாதிக்பாஷா மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட சாதிக்பாஷாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.