ஆசிரியை வீட்டில் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஆசிரியை வீட்டில் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை. கோர்ட் அதிரடி தீர்ப்பு
Update: 2024-03-20 06:08 GMT
சேலம் சீலநாயக்கன்பட்டி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 50). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மசக்காளிப்பட்டி பகுதியை சேர்ந்த ஞானமாணிக்கம் (35) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு யுவராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருட்டு வழக்கில் கைதான ஞானமாணிக்கத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.