அறுவடைக்குத் தயாராக இருக்கும் 30 லட்சம் செங்கரும்புகள்

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைக்காக, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைந்துள்ளன.

Update: 2024-01-04 04:20 GMT

சா்க்கரை, வெல்லம் தயாரிக்கப் பயன்படும் ஆலைகளுக்காகவும், பொங்கல் பண்டிகை மற்றும் கோயில் வழிபாடுகளுக்காகவும் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு பயன்படுத்துவதோடு, கோயில் திருவிழாக்களில் சாமிக்கு வைத்து வழிபடுவதற்கும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன்தேவை குறைவுதான் என்பதால் குறைந்த பரப்பில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்படும்.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெற்ற பிறகு ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடி இருமடங்காக உயா்ந்தது. நிகழாண்டும் திருச்சி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் என 14 ஒன்றியங்களிலும் பரவலாக ஆங்காங்கே அரை ஏக்கா் என்ற வகையில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மண்ணச்சநல்லூா் ஒன்றியத்தில் திருப்பைஞ்ஞீலி, மணப்பாறை வட்டத்தில் பாலக்குறிச்சி, அந்தநல்லூா் ஒன்றியத்தில் திருவளா்ச்சோலை, கிளிக்கூடு, மருங்காபுரி ஆகிய பகுதிகளில்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் சுமாா் 200 ஹெக்டேரில் செங்கரும்பு சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. ஏக்கா் ஒன்றுக்கு 20 ஆயிரம் கரும்புகள் என கணக்கிட்டாலும் சுமாா் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைவிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட வேளாண்மைத்துறைத் துறையினா் கூறுகையில், மாவட்டத்தில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான தேவைக்கும் அதிகமாகவே செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரிடமும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 6 அடிக்கும் அதிகமான உயரம் உள்ளது. சில இடங்களில் 6 அடிக்கு குறைவாகவும் 4 அடி, 5 அடி கரும்புகள் உள்ளன. விவசாயிகளிடம் அரசு நிா்ணயிக்கும் அளவுள்ள அடிகளில் கரும்புகளுக்கு மட்டும் பணம் வழங்கி அவற்றை கொள்முதல் செய்யவுள்ளோம்.

மாவட்டத்தின் மொத்தத் தேவை 8.33 லட்சம் கரும்புகள் மட்டுமே. ஆனால், மூன்று மடங்குக்கு மேல் கரும்பு உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தாலும் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு உதவிட தயாராகவுள்ளோம் என்றாா். திருச்சி மண்டல கூட்டுறவுத்துறையினா் கூறுகையில், 14 ஒன்றியங்களிலும் கரும்பு கொள்முதலுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் இடம்பெற்றுள்ளன. இக் குழுவினா்தான், வட்டாரம் வாரியாக அந்தந்தப் பகுதியில் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வா். கிராம நிா்வாக அலுவலா் மூலம் சான்று பெற்று, விவசாயிகளிடம் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று உடனடியாக அவரவா் வங்கிக் கணக்கில் கொள்முதல் தொகை வரவு வைக்கப்படும் என்றாா். திருவளா்ச்சோலை பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ள சுந்தர்ராஜன் கூறுகையில், 5 போ் இணைந்து ஒரு ஏக்கரில் செங்கரும்புகளை விளைவித்துள்ளோம்.

கடந்தாண்டு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 2 ஆயிரம் கரும்புகள் வழங்கியதன் மூலம் செலவு, வெட்டுக் கூலி, வாடகை கூலி போக ரூ.16 ஆயிரம் லாபம் கிடைத்தது. அரசு அறிவிக்கும் முன்பே தனியாா் ஒருவருக்கு பாதி கரும்புகளை ஒப்பந்தம் செய்துவிட்டதால் அவருக்கு ஒப்பந்தப்படி கரும்பு வழங்கினேன். தனியாரிடம் வழங்குவதைவிட அரசிடம் வழங்குவதில் சற்று கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே, இந்தாண்டு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அதிகளவில் கரும்புகளை வழங்கவுள்ளேன். அரசு இந்தாண்டும் கரும்பு ஒன்றுக்கு ரூ.33 விலை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா் என்றாா் அவா்.

Tags:    

Similar News