போலி ரசீது மூலம் விலை உயர்ந்த 31 செல்போன்கள் கையாடல்
சேலத்தில் போலி ரசீது மூலம் விலை உயர்ந்த 31 செல்போன்கள் கையாடல் செய்த கடை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்குசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் செல்வசேதுபதி (வயது 30). இவர் சேலத்தில் செயல்படும் தனியார் செல்போன் ஷோரூமில் மேலாளராகவும் மற்றும் தணிக்கை அதிகாரியாகவும் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரதா கல்லூரி சாலையில் உள்ள கிளைக்கு சென்று தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது அந்த கடையில் விலை உயர்ந்த 31 செல்போன்கள் மற்றும் 4 செல்போன்களின் பாகங்கள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.23 லட்சத்து 83 ஆயிரம் ஆகும். விசாரணை நடத்தியதில் கடை ஊழியர்கள் சிலர் போலி பில் மூலம் செல்போன்கள் விற்று கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கடை ஊழியர்களான நூர்முகமது, கிருஷ்ணமூர்த்தி, சவுந்தரராஜன், ஹரிஹரன், கலைவாணன், பரத் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.