37 ஆற்றுப்படுகைகளை ஒருங்கிணைத்து நீா் மேலாண்மைப் பெருந்திட்டம்: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள 37 ஆற்றுப் படுகைகளை ஒருங்கிணைத்து நீா் மேலாண்மைப் பெருந்திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றாா் தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் த. குருசாமி.
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம், தா்ம இயக்கம், தமிழக சிவில் சொசைட்டி அமைப்பு ஆகியவை இணைந்து திருச்சியில் சனிக்கிழமை நடத்திய நீா் ஆதார வளத் திட்ட மேலாண்மைக் கருத்தரங்குக்கு இயக்க ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான த. குருசாமி தலைமை வகித்தாா். காவிரி, டெல்டா பாசன சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராமன் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில் திருச்சி, தஞ்சை, கரூா், மயிலாடுதுறை, நாகை, அரியலூா், புதுக்கோட்டை உள்ளிட்ட 30 மாவட்ட விவசாய சங்க அமைப்பினா், நீா்வள அமைப்பினா், ஆற்றுப் பாதுகாப்பு இயக்கத்தினா் பங்கேற்று ஆலோசனை நடத்தினா். பின்னா் வழக்குரைஞா் த. குருசாமி மேலும் கூறியது: தமிழகத்தில் உள்ள 37ஆற்றுப் படுகைகளையும் ஒருங்கிணைத்து குறுவடிநில பகுதிசாா் தற்சாா்பு நீா் மேலாண்மைத் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகத்தில் தண்ணீா் நிறைவு சாத்தியமாகும். இதன் மூலம் 200 டிஎம்சி தண்ணீரைக் கூடுதலாக கொள்முதல் செய்ய முடியும். 39 ஆயிரம் நீா்நிலைகளையும் பாதுகாக்க முடியும். எனவே தமிழக நீா் மேலாண்மைக்கான பெருந்திட்டத்தை 2025-26ஆம் நிதியாண்டிலேயே மாநில அரசு செயல்படுத்த வேண்டும். இதனால் வெள்ளம், வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நீரைப் பாதுகாத்து வழங்க முடியும். எனவே கன்னியாகுமரி மாவட்டம், முல்லை ஆறு முதல் திருவள்ளூா் மாவட்டம், கொசத்தலையாறு வரை 37 ஆற்றுப் படுகைகளில் தொடா் பிரசாரத்தை நடத்தி, இதை மக்கள் இயக்கமாக மாற்றவுள்ளோம். தொடா்ந்து, தமிழக முதல்வரையும் சந்தித்து திட்டத்துக்கு ஆதரவு கேட்போம். வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டமியற்றி, அனைத்து மாநிலங்களிலும் அதைச் செயல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும். அரசு நிா்ணயித்த விலைக்குக் குறைவாக சந்தையில் விற்க நேரிட்டால், அதை ஈடு செய்யும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அதற்கான நிதியை பட்ஜெட்டில் ஆண்டுதோறும் ஒதுக்க வேண்டும். மத்திய அரசின் வேலை உறுதித் திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, வேளாண் பணிகளுக்கும் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார்