39 பயனாளிகளுக்கு ரூ.14.12 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவி

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2025-07-28 10:55 GMT
பெரம்பலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் 39 பயனாளிகளுக்கு ரூ.14.12 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (28.07.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர் வருவாய் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பிலான சாலை விபத்து நிவாரண உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.45,000 மதிப்பிலான இயற்கை மரண உதவித்தெகையும், 3 பயனாளிகளுக்கு ரூ.30,000 மதிப்பிலான திருமண உதவித் தொகையும், 02 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 11 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையையும், 1 பயனாளிக்கு முதல் திருமணச் சான்றும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1,00,000 மதிப்பிலான மருத்துவ கல்வி உதவித்தொகையும், 1 பயனாளிகளுக்கு ரூ.2,05,000 மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரு.55,000 மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,200 ஓய்வூதியத்திற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6,359 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு ரூ.1,796 மதிப்பிலான ஊன்றுகோலினையும் (ஆக்ஸிலரி கிரட்சஸ்), 2 பயனாளிகளுக்கு ரூ.3,285 மதிப்பிலான காதொலி கருவியினையும் என மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.14.12 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 383 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News