திருப்புவனம் அருகே 3ஆம் ஆண்டு கிடா முட்டு போட்டி
திருப்புவனம் அருகே 3ஆம் ஆண்டு கிடா முட்டு போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில் விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான ஆட்டு கிடா சண்டை நடைபெற்றது. இதில் கேரளா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சண்டை கிடாய்கள் பங்கேற்று பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தென்மாவட்டங்களில் ஜல்லிகட்டிற்கு அடுத்தபடியாக ஆட்டு கிடா சண்டை நடைபெறுவது வழக்கம். 3வது ஆண்டாக பொட்டப்பாளையத்தில் ஆட்டு கிடா சண்டை காலை 9 மணிக்கு தொடங்கியது. கேரளா, ஆந்திரா மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 240 ஆட்டு கிடாக்கள் போட்டியில் மோதின.
போட்டிகளில் பங்கேற்ற அனைத்து கிடாய்களுக்கும் துண்டு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதில் அதிக முறை முட்டி எதிராளி கிடாயை விழுத்தாட்டிய கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மோதலுக்கு நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதற்கு கட்டில், பீரோ, ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. 3 வது ஆண்டாக நடந்த சண்டையை கண்டு ரசிக்க ஏராளமான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.