4ம் நாளாக தென் மாவட்டங்களுக்கு அணிவகுத்த வாகனங்கள்
மாவட்டங்களுக்கு அணிவகுத்த வாகனங்கள்
தமிழக அரசு பொங்கல் பண்டிகையொட்டி, 5 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கடந்த 11ம் தேதி முதல் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொங்கலை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட துவங்கினர்.இதனால் சாலையில் கார், பஸ், வேன், ஆட்டோ, பைக் என வாகனங்கள் தொடர்ந்து அணி வகுத்து சென்றன. தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்களுக்கு டோல் பிளாசாவில் கூடுதலாக இரண்டு லேன்கள் திறக்கப்பட்டு மொத்தம் 8 லேன்களில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் எளிதாக கடந்து சென்றன. விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடந்த 11ம் தேதி சென்னை நோக்கி19 ஆயிரம் வாகனங்கள், தென்மாவட்டங்களை நோக்கி39 ஆயிரம் வாகனங்கள் என, மொத்தம் 58 ஆயிரம் வாகனங்கள் கடந்தன. 12ம் தேதி தென்மாவட்டத்தை நோக்கி 35 ஆயிரம் வாகனங்கள், சென்னை நோக்கி 16 ஆயிரம் வாகனங்கள் என மொத்தம் 51 ஆயிரம் வாகனங்கள் சென்றன.நேற்று முன்தினம் தென்மாவட்டத்தை நோக்கி, 26 ஆயிரம் வாகனங்களும், சென்னையை நோக்கி 12 ஆயிரம் வாகனங்களும் என மொத்தம் 38 ஆயிரம் வாகனங்கள் சென்றன. நேற்று 4வது நாளாக தென்மாவட்டங்களுக்கு இரவு 7:00 மணி வரை 22 ஆயிரம் வாகனங்களும், சென்னை நோக்கி 10 ஆயிரம் வாகனங்கள் என மொத்தம் 32 ஆயிரம் வாகனங்கள் சென்றன.