நாகர்கோவிலில் வாலிபர் அடித்து கொலை 4 பேர் கைது
நாகர்கோவிலில் வாலிபரை அடித்து கொலை செய்த 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 05:35 GMT
நாகர்கோவிலில் வாலிபர் அடித்து கொலை 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மேலப்பெரு விளையை சேர்ந்தவர் ஆல்வின் அருள் ஜோஸ் (40). பழைய கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2-ம் தேதி பணகுடி பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாவில் மர்மம் உள்ளது என்றும், பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதற்கிடையில் ஆல்வின் அருள் ஜோசை அடித்து கொன்றதாக ராஜேஷ், இருதயம் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.