அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் உயிரிழப்பு!!
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், ராஜேந்திரன் தனக்கு சொந்தமான ஆடுகளை கடம்பாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர், மாலையில் வழக்கம்போல் ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிச் சென்றபோது திடீர் மழையுடன் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதையடுத்து, ராஜேந்திரன் ஆடுகளை கங்கையம்மன் கோயில் தெரு வழியாக ஓட்டிச் சென்றார். அப்போது, அங்குள்ள மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனை அறியாமல் முந்திச் சென்ற 4 ஆடுகள் மின்கம்பியை மிதித்ததும் மின்சாரம் பாய்ந்து தரையில் விழுந்து பலியாகின. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் மற்ற ஆடுகளை மடக்கி நிறுத்தினார். மேலும், ராஜேந்திரனும் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். இதையறிந்த, கடம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுரேஷ்குமார் மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து சென்று டிராஸ்பார்மரை சுவிட்ச் ஆப் செய்து மின் ஊழியர்கள் உதவியுடன் மின் கம்பியை அப்புறப்படுத்தி, ஆடுகளை மீட்டனர். இறந்த ஆடுகளுக்கு நிவாரணமாக கடம்பாடி தலைவர் தேன்மொழி சுரேஷ்குமார் ரூ.20 ஆயிரத்தை ஆடு உரிமையாளர் ராஜேந்திரனிடம் வழங்கினார்.