நீட் தேர்வில் நாமக்கல் மாணவர்கள் 4 பேர் 720 எடுத்து சாதனை!

நீட் தேர்வில் நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையம் மாணவர்கள் 4 பேர் 720க்கு 720 எடுத்து இந்திய அளவில் சாதனை படைத்தனர்.

Update: 2024-06-05 14:54 GMT

நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவ மாணவிகள் 4 பேர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததை அடுத்து அந்த மாணவ- மாணவிகளை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். NCERT உள்ளிட்ட பாடத்திட்டங்களை முழுமையாக படித்து, பயிற்சி எடுத்ததால் வெற்றி பெற முடிந்ததாக மாணவ- மாணவிகள் கூறுகின்றனர்.

நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவ மாணவிகள் P. ரஜனிஸ், ஆர். ரோஹித், S. சபரீசன், M. ஜெயதி பூர்வஜா ஆகிய நான்கு பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் ஒரு சாதனை படைத்துள்ளனர். MBBS, BDS ஆகிய மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு, இந்தியா முழுவதும் தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வை 11 மையங்களில் 6,180 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று NTA ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் 10 நாட்கள் முன்பாகவே நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (04.06.2024) வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின் படி நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்ட நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, ரஜனிஸ், ரோஹித், சபரீசன், ஜெயதி பூர்வஜா, ஆகிய 4 பேரும் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த மாணவ மாணவிகள் நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்திற்கு வருகை தந்து அவர்களுக்கு பயிற்சி மையத்தின் சார்பில் கல்வி நிலைய தாளாளர் சரவணன், ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர் இனிப்புகள் வழங்கி அவர்களை பாராட்டினர். இப்பயிற்சி மைய மாணவர்கள் நித்தீஷ், ரித்திக்சரன், விக்னேஷ் ஆகிய 3 பேர் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று பயிற்சி மையத்தில் 2-ம் இடம் பெற்றுள்ளனர். ஹித்தேஷ் மோகன், மிதுன்ராஜ், பவன்குமார், சங்கமிதுன் ஆகிய 4 மாணவர்கள் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று பயிற்சி மையத்தில் 3ஆம் இடம் பெற்றுள்ளனர்.

இந்த கோச்சிங் சென்டரில் படித்து தேர்வு எழுதிய 49 மாணவர்கள் 720க்கு 700 மதிப்பெண்களுக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கிரீன் பார்க் பயிற்சி மையத் தலைவர் சரவணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகளும் மாணவ, மாணவிகளை பாராட்டினார்கள். இதுகுறித்து நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அப்போது பேசிய மாணவர் பி ரஜினிஷ், NCERT பாடத்திட்டங்களை முழுமையாக படித்து நீட் தேர்வை எதிர் கொண்டால் எளிமையாக இருக்கும். இந்த ஆண்டு நீட் தேர்வு எளிமையாக இருந்தது தன்னம்பிக்கையுடன் நீட் தேர்வு எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். புது தில்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் கார்டியாலஜி படிப்பு படிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து, சாதனை படைத்த திருச்செங்கோடு அடுத்த கூட்டப்பள்ளியை சேர்ந்த மாணவர் R. ரோஹித் கூறும்போது தினந்தோறும் பாடங்களை படித்து கடினமாக உழைத்தால் நீட் தேர்வை எளிதில் எதிர்கொள்ளலாம்.

கார்டியாலஜி அல்லது நியூராலஜி படிப்பு படிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர் எஸ். சபரீசன் கூறும் போது ஆசிரியர்களின் தன்னம்பிக்கை ஊட்டும் பயிற்சிகள் மற்றும் NCERT பாடத்திட்டத்தை முழுமையாக படித்து வந்ததால் நீட் தேர்வை எளிமையாக எதிர்கொண்டு இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார், பயாலஜி பாடத்தை அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து NCERT பாடத்தில் முழு கவனம் செலுத்தியதாகவும் அதனால்தான் நீட் தேர்வை வெற்றி பெற முடிந்ததாகவும், புது தில்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் இளநிலை மருத்துவ படிப்பு படிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் மாணவி ஜெயதி பூர்வஜா கூறும்போது தினந்தோறும் பாடத்திட்டங்களை நன்கு புரிந்து கொண்டு படித்ததாகவும் அப்போது ஏற்படும் பிழைகளை உடனுக்குடன் திருத்திக் கொண்டு NCERT பாடத்தை முழுமையாக படிக்க வேண்டும் இயற்பியல், வேதியியல் பாடங்களில் நன்கு படித்து அதன் பிறகு உயிரியல் பாடத்தை தொடர்ச்சியாக நன்கு படித்ததால்தான் வெற்றி பெற முடிந்தது என்றும் எதிர்காலத்தில் ஒரு கார்டியாலஜிஸ்ட் ஆவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

Similar News