புத்தாண்டு கொண்டாட சென்றபோது விபரீதம் - கடலில் மூழ்கி 4 பேர் பலி

Update: 2023-12-31 02:27 GMT
புத்தாண்டு கொண்டாட சென்றபோது விபரீதம்: கடலில் மூழ்கி 4 பேர் பலி

சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சிவதான் (வயது 46). இவர் நிகழ்ச்சிகள் நடத்தும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 20 பேர் பணி புரிகின்றனர். 2024 புத்தாண்டை கொண்டாடும் வகையில் இவரும், இவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கானத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு நேற்று மாலை சென்றனர். அங்கு புத்தாண்டை கொண்டாடுவதற்கு ரிசார்ட்டை முன் பதிவு செய்தனர். நேற்று மாலை அனைவரும் கானத்தூர் சினேகா கார்டன் கடற்கரைக்கு சென்றனர்.

அவர்களில் 9 பேர் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை ஒன்று 9 பேரையும் இழுத்து சென்றது. இதில் 2 பேர் மட்டும் தப்பி கரை சேர்ந்தனர். மீதமுள்ள 2 பேர் மீட்கப்பட்டனர். சிவதான், அவரது மகள் நிவிதா (19), நவீன் (26), மானஸ் (18), பிரசாத் (18) ஆகிய 5 பேரை கடல் அலை இழுத்து சென்றது. இதையடுத்து, போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் கானத்தூர் பகுதி மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான 5 பேரையும் தேடினர். இதில் சிவதான், நவீன் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர்.

நிவிதாவை கடல் அலை 2 கி.மீ. தூரம் இழுத்து சென்றது. இதையடுத்து கடலோர காவல் படையினர் மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று நிவிதாவை மீட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் கடலில் மூழ்கி மாயமான பிரசாத், மானஸ் ஆகியோரை தேடி வந்தனர்.

கேளம்பாக்கம் உதவி கமிஷனர் வெங்கடேசன், கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி, சப்-இன்ஸ்பெக்டர் துரைமுருகன் மற்றும் கானத்தூர் போலீசார் படகில் இரவு முழுவதும் இருவரையும் தேடினார்கள். மேலும், கடலோர காவல் படையினர், கடற்படையினர், தீயணைப்பு படையினர், மீனவர்கள் ஆகியோரும் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். உத்தண்டி முதல் மாமல்லபுரம் கடற்கரை வரை தேடினார்கள். அதேபோல ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று காலை பிரசாத் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். மேலும் மானஸ் இன்னும் கிடைக்கவில்லை. அவர் கடல் அலையில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் மூலம் கடல் அலையில் சிக்கி 4 பேர் பலியானது தெரியவந்துள்ளது. மானஸ் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புத்தாண்டை கொண்டாட சென்று 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News