பாதுகாப்பற்ற உணவால் 40 விழுக்காடு குழந்தைகள் பாதிப்பு
பாதுகாப்பற்ற உணவால் 40 விழுக்காடு குழந்தைகள் பாதிக்கபட்டுள்ளதாக ஒன்றிய அரசின் கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசகருமான அசித் கோபால் தெரிவித்துள்ளார்.
உலக உணவு பாதுகாப்பு நாளையொட்டி, தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது: உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப்படுகிறார்.
பாக்டீரியா, வைரஸ்கள், பாதிக்கப்படக்கூடிய ஒட்டுண்ணிகள் அல்லது கன உலோகங்கள் போன்ற ரசாயனப் பொருட்கள் கொண்ட அசுத்தமான உணவை சாப்பிடுவதால் 200-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படுகின்றன. நம் நாட்டு மக்கள் தொகையில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 9 விழுக்காடு பேர் உள்ளனர். இவர்களில் 40 விழுக்காடு பேருக்கு பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவர்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர்.
உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், உணவால் பரவும் நோய்களைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும்.
உணவு பதப்படுத்துதல், சுகாதாரத்தின் முக்கியத்துவம், பாதுகாப்பானஉணவு உண்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்" என்றார் அசித் கோபால். இக்கருத்தரங்கத்துக்கு தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ. பழனிமுத்து தலைமை வகித்தார். இந்திய உணவு அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் நிலேஷ் அம்ரித்கர், கனடா நாட்டின் சஸ்காட்சுவான் பல்கலைக்கழகப் பேராசிரியர் வெங்கடேஷ் மேடா சிறப்புரையாற்றினர்.
இக்கருத்தரங்கத்தில் ஏறத்தாழ 20 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 250-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நிறுவன பேராசிரியர் வி.ஆர்.சினிஜா வரவேற்றார். நிறைவாக, இணைப் பேராசிரியர் டி.வி. சிதானந்த் நன்றி கூறினார்.