குமரி விவேகானந்தர் மண்டபத்தில் 40,000 பேர் பார்வை
பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலியாக கடந்த 3 நாட்களில் குமரி விவேகானந்தர் மண்டபத்தை 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.
Update: 2024-01-17 01:57 GMT
தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு குறிப்பாக கன்னியாகுமரியில் 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நான்கு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி முதல் இன்று 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 40 ஆயிரத்து 900 சுற்றுலா பயணிகள் படகு சென்று பார்வையிட்டுள்ளனர். இதில் 13ஆம் தேதி 8,200 பேரும், போகிப் பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை அன்று 8,600 பேரும் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 100 பேரும் மாட்டுப்பொங்கல் தினமான இன்று சுமார் 10,200 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது