சாலைகளில் சுற்றி திரிந்த 42 மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு!!
திருவள்ளூர் பகுதியில் சாலைகளில் சுற்றி திரிந்த 42 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
திருவள்ளூரில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. அதேபோல் திருவள்ளூர் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. விபத்துக்கு காரணமாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில் படுத்துக்கிடக்கும் மற்றும் சுற்றி திரியும் மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு தெரிவித்திருந்தார். ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் மாட்டின் உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்ததால் இந்த முறை பிடிபடும் மாடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும், கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி நேற்று அதிகாலை 5 மணி முதல் நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் கோவிந்தராஜு முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் பிலிப்ஸ், சீனிவாசன், கோட்டீஸ்வரன் ஆகியோர் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெ.என்.சாலை, சிவிஎன் சாலை, மோதிலால் தெரு ஆகிய பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 42 மாடுகளை பிடித்தனர். அவை கோசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு தெரிவித்தார்.