காஞ்சியில் 42 டிகிரி செல்ஷியஸ் தகிப்பு
காஞ்சிபுரத்தில் ஏப்., இரண்டாவது வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று 42 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி துவங்கி 28ம் தேதி நிறைவு பெற்றது. இருப்பினும் கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, காஞ்சிபுரத்தில் ஏப்., இரண்டாவது வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. கத்திரி வெயில் நாட்களில் வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில், மே மாதம் இரண்டாவது வாரத்தில் விட்டு விட்டு பெய்த கோடை மழையால், காஞ்சிபுரம் நகரில் சில நாட்கள் வெப்பம் சற்று தணிந்து இருந்தது. இந்நிலையில், மே 28ம் தேதி அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதும், வெயிலின் தாக்கம் குறையும் என, காஞ்சிபுரம் மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால், அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான மே 28ம் தேதியே வெயில் சுட்டெரித்தது. கடந்த மூன்று நாட்களே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காஞ்சிபுரத்தில் நேற்று, 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது. இது, பாரன்ஹீட் அளவில் 108 டிகிரியாகும். வெயிலில் நடமாடியோர், உடலை பாதுகாக்கும் வகையில், குடை பிடித்தும், தொப்பி அணிந்தும், பெண்கள் துப்பட்டா வால் மற்றும் புடவையால் தலை முகத்தை மூடியபடி சென்றதை காண முடிந்தது. மாலை 5:30 மணியை கடந்தும், காஞ்சிபுரம் நகரில் அனல் காற்று வீசியதால் வெயிலில் நடமாடியோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
அதேபோல, வீடுகளில் மின்விசிறி ஓடினாலும், அனல் காற்றே வீசியதால் முதியோர், கர்ப்பிணியர், குழந்தைகள் அவதிக்குள்ளாகினர். அக்னி நட்சத்திரம் முடிந்ததும், ஆதவனின் ஆட்டம் முடிவுக்கு வந்து வெயிலின் தாக்கம் குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெயில் அதிகமாக இருப்பதால், ஆதவன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிவிட்டாரோ என, காஞ்சிபுரம் வாசிகள் அச்சமடைந்து உள்ளனர்.