ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களது 8 வயது மகளுடன் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர் செல்ல 18.4.2023 அன்று புனேவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் பயணம்செய்தனர்.
ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட உடன் ரயிலில் பயணித்த முதியவர் ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதைப்பார்த்த குடும்பத்தினர் மற்றும் சக பயணிகள் அந்த முதியவரை பிடித்து ரயில்வே கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து ரயில் சேலம் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் அங்கிருந்த சேலம் ரயில்வே போலீசாரிடம் முதியவரை ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் காட்பாடி காந்திநகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ்பாபு (65) என்பது தெரியவந்தது.
பின்னர் அவரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் சுரேஷ்பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.