50 வருடங்களுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 வருடங்களுக்கு பின் சந்தித்து கொண்டனர்.

Update: 2024-07-28 13:44 GMT
பரமத்திவேலூர், ஜுலை.29- பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பரமத்தி வேலூரில் அரசு உதவிபெறும் கந்தசாமி கண்டர் உயர்நிலை பள்ளியில் கடந்த 1974-75- ஆம் ஆண்டில் எஸ் எஸ் எல் சி படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட பல்வேறு துறையில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் பரமத்தி வேலூர் காமராஜர் சிலையில் இருந்து பள்ளிக்கு கல்வி சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு பள்ளி சாலை வழியாக பள்ளியை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கண்டர் அறநிலைய தலைவர் டாக்டர் சோமசுந்தரம் தலைமை வகித்து வாழ்த்தி பேசினார். கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் தியாகராஜன், பரமத்தி ராகா ஆயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சு. தமிழ்மணி, பெரியசாமி, நல்லசிவம், டாக்டர் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் பொன்விழா மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியும், ஆசிரியர்கள் வாழ்த்துரை, மலரும் நினைவுகளை பகிர்தல் மற்றும் முன்னாள் மாணவர்கள் நினைவாக பள்ளிக்கு 3 கணினிகள், பள்ளி நூலகத்திற்கு நூல்கள் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னாள் மாணவர்கள் சார்பில் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. முடிவில் டாக்டர் சங்கர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தங்கவேல், சண்முகநாதன், கொங்கு மேல்நிலைப்பள்ளி செயலாளர் தங்கவேல், சண்முகநாதன், கொங்கு மேல்நிலைப்பள்ளி செயலாளர் தங்கராஜ் ஆகியோர்  செய்திருந்தனர்.

Similar News