நாட்டுக்கோழி பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம்
நாட்டுக்கோழி பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்றும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிருந்தாதேவி கூறியுள்ளார்.
நாட்டுக்கோழி பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்றும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிருந்தாதேவி கூறியுள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2024-25-ம் நிதி ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும்.
அந்த நிலம் குடியிருப்பு பகுதிகளில் இருக்க கூடாது. நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 3 ஆண்டு காலம் கோழிப்பண்ணையை பராமரிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் வருகிற 5-ந் (வெள்ளிக்கிழமை) தேதிக்குள் அவரவர் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.