இதய நோயால் பாதிக்கப்பட்ட மெக்கானிக்கிற்கு ரூ.50,000 நிதியுதவி
இதய நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிய சக தொழிலாளிக்கு உதவிக்கரம் நீட்டிய மயிலாடுதுறை மாவட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் டூவீலர் மெக்கானிக் சரவணன். இருதய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் இவர் பணிக்கு செல்ல முடியாததால், குடும்பமே வருமானம் இன்றி முடங்கியது.
ஏழ்மை நிலையால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் சரவணன் அவதியுற்று வந்த நிலையில், அதனை அறிந்த மற்ற டூவீலர் மெக்கானிக்குகள் அவருக்கு உதவும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலை பைக் டாக்டர் நல அமைப்பின் மூலமாக அனைவரும் ஒன்று சேர்ந்து இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரவணன் இல்லத்திற்கு சென்று தங்கள் அனைவரின் மூலமாக நிதி திரட்டி அவரது இருதய நோய் அறுவை சிகிச்சைக்காக ரூ.50,000 ரொக்க பணமும், குடும்பத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கினர்.
இந்த காலத்தில் உறவினர்களே உதவாத நிலையில் வீடுதேடி வந்து சக ஊழியர்கள் உதவியதால் சரவணன் மற்றும் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.