குமரி தந்தை மார்ஷல் நேசமணி 56 -வது நினைவு நாள் 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2024-06-01 11:58 GMT
நாகர்கோவில் மார்ஷல் நேசமணி சிலைக்கு கலெக்டர் மரியாதை செலுத்தினார்

குமரி மாவட்டம்  நட்டாலம் ஊராட்சிக்குட்பட்ட நேசர்புரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் மார்ஷல் நேசமணி. வழக்கறிஞரான இவர்   ஏழை, எளிய,  ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களின் நெஞ்சங்களில் பாதுகாவலராக விளங்கியவர்.    

பனை மற்றும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை, அவர்களது நலனுக்காக போராடி வெற்றி பெற்றார்.   

கேரளா வோடு இருந்த தமிழ்ப்பகுதியான குமரி மாவட்டத்தை தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முழங்கினார். அதற்காக போராடினார்.   1956-ஆம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி முதல், தமிழகப் பகுதிகள் தங்கள் உரிமையை நிலைநிறுத்தியதோடு, தமிழகப் பகுதிகள் அனைத்தும் தாய்த் தமிழகத்துடன் இணைந்து, அன்று முதல் கன்னியாகுமரி மாவட்டம் தோன்றியதற்கு, முழு முதல் காரணமாக அமைந்தவர் மார்ஷல் நேசமணி.   ‘ குமரி தந்தை ”, ‘ கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி “, ‘ மார்ஷல் “ என அனைத்து மக்களால் புகழப்பட்டு வருபவர். 

Advertisement

 01.06.1968-ஆம் ஆண்டு தனது 73-ஆவது வயதில் காலமானார். அவரது 56-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மார்ஷல் நேசமணி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.       

இந்நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா,    நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், மார்ஷல் நேசமணி உறவினர்கள் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட் சுஷ்மா உட்பட பலர் கலந்துக்கொண்டார்கள்.

Tags:    

Similar News