6 பேர் சிறையிலடைப்பு
கள்ளச்சாராய வழக்கில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளச்சாராய வழக்கில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து, 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் உயிரிழந்தனர். 150 பேர் குணமடைந்த நிலையில், 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, கள்ளச்சாராய வியாபாரிகள், மெத்தனால் சப்ளையர்கள் என 21 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட கருணாபுரம் கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, மடுகரை மாதேஷ், சேஷசமுத்திரம் சின்னதுரை, விரியூர் ஜோசப் உட்பட 11 பேரை கடந்த 1ம் தேதி சி.பி.சி.ஐ.டி., போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
சி.பி.சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி., கோமதி தலைமையிலான போலீசார், சென்னையில் இருந்து மெத்தனால் வாங்கியது குறித்தும், எந்தெந்த பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது, இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து அவர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணைக்கு பின் கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சென்னை சிவக்குமார், பன்ஷிலால், கவுதம்சந்த் ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நேற்று மாதேஷ், சின்னதுரை, ஜோசப்ராஜா, கண்ணன், கதிரவன் உட்பட 6 பேரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் முன் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.