மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை,சேலம் மகிளா கோர்ட்டு தீர்ப்பு.
Update: 2024-03-26 02:30 GMT
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வெள்ளக்கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 33). கொளத்தூர் அருகே உள்ள குள்ளமுடையானூர் பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை. இவருடைய மகள் சசி. மணிகண்டன், சசி இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சசி கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மகளை தற்கொலைக்கு தூண்டிய, மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சசியின் தந்தை அய்யந்துரை கொளத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மணிகண்டனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.