8 டன் சின்ன வெங்காயத்தை கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்திற்கு ஏற்றுமதி

ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டதால் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.;

Update: 2025-01-27 15:22 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் சின்ன வெங்காயத்தை கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்திற்கு ஏற்றுமதி செய்து வைக்கும் நிகழ்வினை சார் ஆட்சியர் சு.கோகுல் தொடங்கி வைத்தார் பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயத்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்திற்கு ஏற்றுமதி செய்து வைக்கும் நிகழ்வினை சார் ஆட்சியர் சு.கோகுல், இன்று (27.1.2025) செட்டிக்குளத்தில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அதிக அளவில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்திடும் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. விவசாயிகள் சின்னவெங்காயத்தை வெளிச்சந்தைக்கு விற்கும்போது இடைத்தரகர்களால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கடந்த 17ஆம்தேதி நடைபெற்ற ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்புக் குழுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதற்கு இணங்க, சார் ஆட்சியர் சு.கோகுல் தனிக்கவனம் செலுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் சின்ன வெங்காயத்தை கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்திற்கு ஏற்றுமதி செய்திட பேசி ஒப்புதல்பெற்று, அதனடிப்படையில், கேரள அரசின் HORTICORP நிறுவனத்தோடு. பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும்“ சின்ன வெங்காயத்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 31.12.2024 அன்று சார் ஆட்சியர் முன்னிலையில், கேரளா அரசின் HORTICORP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.பிரதீப் மற்றும் மண்டல மேலாளர் சஜீவ் ஆகியோருடன் கையெழுத்தானது. அதனடிப்படையில், இன்று (27.1.2025) செட்டிகுளத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆலத்தூர் மற்றும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 8டன் அளவிலான சின்ன வெங்காயத்தை ஆலத்தூர் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வை சார் ஆட்சியர் சு.கோகுல் தொடங்கி வைத்தார். ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டதால் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்தின் தேவைக்கு ஏற்ப பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் பெறக்கூடிய மற்ற பயிர்களையும் ஏற்றுமதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) எஸ்.எஸ்தர் பிரேமகுமாரி, வேளாண்மை அலுவலர்கள் செண்பகம், கிருஷ்ணவேணி, உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள் துரைராஜ், விநாயகம் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Similar News