தெப்பக்குளத்தில் பாய்ந்து நீரில் மூழ்கிய சரக்கு மினிவேன்
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் பாய்ந்து நீரில் மூழ்கிய சரக்கு மினிவேனை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வாகனம் மற்றும் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ளது. அவ்வாறு பாதயாத்திரையாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு நேர்த்திக்கடனான அக்கினி சட்டி, பால்குடம் எடுத்தல் மற்றும் குழந்தையை தொட்டில் வைத்து கொண்டு வருதல் அழகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை இந்த தெப்பக்குளத்தில் இருந்து தான் தொடங்கப்படுகிறது.
மேலும் மாரியம்மன் தெப்பத்தேர் விழாவும் இங்கு தான் நடைபெறும். அந்த தெப்பக்குளம் அருகே வாடகை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமயபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த 35 வயதான தேவரடியான் சரக்கு ஏற்றும் மினி வேன் சொந்தமாக வைத்துள்ளார். தேவரடியான் தெப்பக்குளம் முன்பு மினிவேனை வைத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது கை பிரேக் பிடிக்காமல் திடீரென தெப்பக்குளத்தில் சீறிப் பாய்ந்து நீரில் மூழ்கியது.இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் குளத்தில் உள்ளே வாகனம் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் ( கூடுதல் பொறுப்பு ) தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி வீரர்கள் சதீஸ்குமார்,சுதர்சன், விக்னேஷ்,பெரியசாமி, வெங்கடேஷ்,தர்மராஜா கொண்ட குழுவினர் கிரேன் உதவியுடன் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தெப்பக்குளத்தில் மூழ்கிய மினி வேனை மீட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிகழ்விற்க்காக வந்த திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அப்பகுதியில் கரை நிறுத்தி விட்டு மது அருந்திக் கொண்டிருந்த போது இதேபோல் தெப்பக்குளத்தில் கார் சீறிப் பாய்ந்து நீரில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.