அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
பென்னாகரம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
Update: 2024-04-30 07:01 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம. விவசாயி. இவர் நேற்று தனது வீட்டில் இருந்து மடம் கிராமத்தில் உள்ள அவரது மகளின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மொபட்டில் நல்லாம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணாத்திப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த ஆறுமுகம் மீது தர்மபுரியில் இருந்து பென்னாகரம் நோக்கி வந்த அரசு பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பென்னாகரம் போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவருடைய மகன் குமரன் கொடுத்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.