வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக தண்ணீர் எடுக்க பிஏபி வாய்க்காலை சேதப்படுத்தியதாக புகார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் அருகே முறைகேடாக தண்ணீர் எடுக்க பி.ஏ.பி. வாய்க்கால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்தநாயக்கன்வலசு சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் பிஏபி உதவி பொறியாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
Update: 2024-02-28 05:30 GMT
வெள்ளகோவில் பகுதி பி.ஏ.பி. வாய்க்காலில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதகு எண் 36 மூலம் 220 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ராகுவையன் வலசு -மயில் ரங்கம் தார்ச்சாலை ஓரத்தில் புதிதாக வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. பல விவசாயிகள் வெளியூர்களில் இருப்பதால் உடனடியாக இதுகுறித்து தகவல் தெரியவில்லை. சாதுரியமான முறையில் பல வருடங்களாக மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரையும், அதிகம் கூடுதல் தண்ணீரையும் எடுத்து மூத்தநாயக்கன்வலசை சேர்ந்த பி.மனோகரன் என்பவர் காட்டில் ஏரி போல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் பொக்லைன் வாகனம் மூலம் மற்றவர்களின் காடுகளுக்கு செல்லும் பாதையை பயன்படுத்த முடியாமல் குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள காடுகளின் முள்வேலி, காட்டின் அளவு கற்களும் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பலருடைய தண்ணீரை ஒருவருடைய காட்டுக்கு மட்டும் எடுத்துச் சென்று பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானதாகும். எனவே மனோகரன் மற்றும் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.