வெளிநாட்டு பயணியின் கையில் வைணவ சமய சின்னங்கள்

மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில் வழிபட வந்த போலந்து நாட்டு பயணியின் கைகளில் வைணவ சமய சின்னங்கள் டாட்டூவாக வரையப்பட்டிருந்ததை மற்ற பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

Update: 2024-04-08 07:57 GMT
 வெளிநாட்டு பயணி அனந்ததீர்த்தம்

மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின், 12ம் பீடாதிபதி வராஹ மஹாதேசிகர், நேற்று முன்தினம் சுவாமியரை தரிசித்து, பூதத்தாழ்வாருக்கு ரத்தின அங்கி சாற்றி வழிபட்டார். இந்நிகழ்விற்கு ஐரோப்பிய கண்டத்தில் உள்ள போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதி, கோவிலுக்கு வந்து இருந்தனர். கணவர் அனந்ததீர்த்தம், 49, மனைவி காஞ்சனா தேவி, 42. இருவரும் லண்டனில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

இதில், அனந்ததீர்த்தம் வலதுகரத்தில் சங்கு, இடதுகரத்தில் சக்கரம் என, வைணவ சமய சின்னங்களை 'டாட்டூ' ஓவியமாக வரைந்திருந்தார். இவை, வைணவ சமயம் மீதான அவர்களின் ஆர்வம், பீடாதிபதி, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. அனந்ததீர்த்தம், 'புண்டரீக முனிவருக்கு ஸ்தலசயன பெருமாள் காட்சியளித்தது' குறித்து, ஆங்கிலத்தில் விவரித்ததை கேட்டு, பீடாதிபதி ஆச்சரியப்பட்டார். இதையடுத்து, போலந்து தம்பதி பீடாதிபதியை வணங்கி ஆசியும் பெற்றனர்.

இது குறித்து, அனந்ததீர்த்தம் கூறியதாவது: எனக்கும், மனைவிக்கும், ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு, இந்துவாக மாறி விட்டோம். 30 ஆண்டுகளாக, இந்தியா வருகிறோம். மாமல்லபுரத்திற்கு பலமுறை சுற்றுலா வந்துள்ளோம். இங்கு வரும்போது, ஸ்தலசயன பெருமாளை தரிசிக்க தவறுவதில்லை. சில நாட்கள் முன் சுற்றுலா வந்தோம். கோவிலுக்கு பீடாதிபதி வருவதை அறிந்து, அவரை தரிசித்து வணங்கியது மகிழ்ச்சி இவ்வாறு, அவர் கூறினார்.

Tags:    

Similar News