செல்போன் தர மறுத்ததால் கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை!

அரக்கோணம் அருகே செல்போன் தர மறுத்ததால் கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-28 04:47 GMT

கொலை செய்யப்பட்ட தேவராஜ்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கரிக்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (37). இவர் அரக்கோணம் அருகே சாலை கிராமத்தில் உள்ள சிமெண்டு கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி செண்பகம் என்ற மனைவியும் 7 மற்றும் 4 வயதில் இரண்டு மன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கரிக்கந்தாங்கல் அருகே உள்ள ஏரிக்கரைக்கு இயற்கை உபாதைக்காக தேவராஜ் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர்கள் சிலர் தேவராஜ் வைத்திருந்த செல்போனை கேட்டுள்ளனர். தேவராஜ் செல்போனை தர மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவராஜை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனால் தேவராஜ் அலறவே அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அவரை வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.இந்த நிலையில் படுகாயம் அடைந்த தேவராஜ் மீட்கப்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து சோளிங்கர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். இதனிடையே சோளிங்கர் மருத்துவமனை எதிரில் இறந்தவரின் உறவினர்களும் அந்த ஊர் பொதுமக்களும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடலை சோளிங்கர் அரசு மருத்துவமனைலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகள் கைது செய்யப்படுவர் என போலீசார் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News