நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
பர்கூர் பகுதிகளில் பல்வேறு பாதுகாப்பு நலன் கருதி சிறப்பு படை மூலம் நடத்திய தேடுதல் வேட்டையில் உரிய அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக பர்கூர் காவல் காவல்துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில் பர்கூர் காவல் ஆய்வாளர் வளர்மதி, தலைமையில் கந்திகுப்பம் காவல் உதவி ஆய்வாளர் செல்வமாணிக்கம், மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பர்கூர் காவல் ஆய்வாளர் வளர்மதி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருவிநாயனபள்ளி அருகில் உள்ள காப்புக்காட்டில் தொந்தீசன் கொல்லை இருளர் காலனி பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் வெங்கடேசன் என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் உரிமமின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அவரை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் பறவைகள் மற்றும் வன விலங்குகளை வேட்டையாட கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். உரிய ஆவனங்களின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பாராட்டினார்.