காஞ்சியில் கொரோனாவால் மூடப்பட்ட பூங்கா 3 ஆண்டுகளாக திறக்கப்படாத அவலம்

காஞ்சியில் கொரோனாவால் மூடப்பட்ட பூங்கா 3 ஆண்டுகளாக திறக்கப்படாத அவல நிலையில் உள்ளது.

Update: 2024-06-30 14:58 GMT

பாழடைந்துள்ள பூங்கா

காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு ஜெம் நகரில், 2015 - -16ல், அம்ரூத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், நடைபயிற்சிக்கான நடைபாதை, சிறுவர்களுக்கான ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் செயற்கை நீருற்று, அழகிய புல்தரை, இருக்கை வசதிகள், இரவில் ஒளிரும் மின்விளக்கு உள்ளிட்ட பல வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஜெம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது மூடப்பட்ட பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

இதனால், பூங்காவிற்குள் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடைகின்றன. இந்த விஷ ஜந்துக்கள், அவ்வப்போது அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், அப்பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள் பழுதடைந்து உடைந்துள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

எனவே, பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜெம் நகர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News