கள்ளத் துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்கள் வைத்திருந்தவர் கைது
அஞ்செட்டி அருகே கள்ளத் துப்பாக்கி செய்வதற்காக உபகரணங்கள் வைத்திருந்தவரை கைது செய்த வனத்துறையினர், துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள், மான்கள், காட்டு எருமைகள், சிறுத்தைகள், பறவை இனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்கின்றன. இந்த வனவிலங்குகளை கள்ள நாட்டு துப்பாக்கிகளை கொண்டு மர்ம நபர்கள் வேட்டையாடி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடகரை மலை கிராமத்தில் ஒருவர் கள்ள நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து வருவதாகவும், அவரிடம் நாட்டு துப்பாக்கிகள் தயார் செய்வதற்கான உபகரணங்கள் உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வனத்துறையினர் கொடகரை மலை கிராமத்திற்கு சென்று தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மல்லன் (36) என்பவரது வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்தபோது அங்கு கள்ள நாட்டு துப்பாக்கி தயாரிப்பதற்கான உபகரணங்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் மல்லனை கைது செய்து அஞ்செட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் எத்தனை பேருக்கு சட்ட விரோதமாக கள்ள நாட்டு துப்பாக்கிகள் செய்து கொடுத்தார் அதன் மூலம் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.