வீட்டில் வளர்த்த கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு
கொட்டாரம் அருகே கோழிகளை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் கிடந்த 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
Update: 2024-06-18 06:48 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொட்டல் குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா. இவரது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கோழிகள் திடீரென சத்தம் கேட்டது. இதையடுத்து ஜெயா வெளியே வந்து பார்த்தபோது, வீட்டுக்கு எதிரில் உள்ள பாறாங்கற்கள் இடையே மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. மேலும் அந்த மலைப்பாம்பு கோழிகளை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் கிடந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலையத்தினர் சென்று அந்த பாம்பை பிடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தனர். பாம்பு சுமார் 12 அடி நீளம் இருந்தது. பின்னர் அந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்து, காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட முடிவு செய்தனர்.