வழி தவறி வந்த புள்ளி மான்!
கிராமத்துக்கு வந்து 2 வயதான புள்ளி மானை மீட்டு ஆவூர் கால்நடை மருத் துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் லிங்கமலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-29 06:40 GMT
விராலிமலை தாலுகா ஆவூர் அருகே விராலிமலை கீரனுார் சாலை மற்றும் ஆவூர் இலுப்பூர் சாலை யோரத்தில் லிங்கமலை வனக்காடு உள்ளது. இங்கு மான், முயல் மற்றும் மயில்கள் அதிகளவில் உள்ளன. கோடை காலம் காரணமாக வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால், இரவு நேரத்தில் தண்ணீருக்காகவும், உணவு தேடியும் மான்கள், மயில்கள் அங்கிருந்து வெளியேறி மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. அப்படி வரும்போது வெறி நாய்கள் துரத்தி கடிப்பதால் அவ்வப்போது காயமடைந்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் வாகனத்தில் அடிபட்டும், நாய்கள் துரத்தி கடித்ததிலும் 5 மான்கள் இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் லிங்கமலை வனப்பகுதியை ஒட்டிய கிராமமான ஆம்பூர்பட்டியில் நேற்று காலை 7 மணியளவில் பெண் புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது. அதை தெருநாய்கள் துரத்தி கடித்த நிலையில், கிராமமக்கள் மானை பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் சரவணன், செல்வராஜ் ஆகியோர் கிராமத்துக்கு வந்து 2 வயதான புள்ளி மானை மீட்டு ஆவூர் கால்நடை மருத் துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் லிங்கமலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். லிங்கமலை வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் ஊற்றினால் வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்கலாம் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.