தாய்மாமனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை !
விழுப்புரத்தில் தாய்மாமனை கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா கோட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 70). இவருக்கும் இவரது தங்கை பாஞ்சாலிக்கும் வீட்டுமனை பிரச்சினையில் முன்விரோதம் இருந்தது.
இதனால் பாஞ்சாலியின் மகன் மதியழகன் (31) தனது தாய்மாமனான சுந்தரமூர்த்தியிடம் தகராறு செய்து வந்தார். அடிக்கடி சுந்தரமூர்த்தியிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் சுந்தரமூர்த்தி வீட்டு மனை பத்திரத்தை கிராமநிர்வாக அலுவலரிடம் காட்டி இடத்தை அளக்க சொன்னார். இடத்தை அளந்த பிறகு மேலும் மதியழகன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3.3.2023 அன்று சுந்தரமூர்த்தி மனைவி செல்வி, தனது பாட்டி லட்சுமி என்பவருக்கு கண் பரிசோதனை செய்வதற்காக சென்னைக்கு சென்று விட்டார். சுந்தரமூர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அங்கு வந்த மதியழகன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொடுவா கத்தியால் சுந்தரமூர்த்தியை தலையில் வெட்டினார். இதை பார்த்த உறவினர் சரவணன், பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழ் ஆகியோர் தடுக்க முயன்றனர்.
அவர்களை தள்ளிவிட்டு விட்டு, மதியழகன் மீண்டும் அவரை வெட்டினார். இதில் சுந்தர மூர்த்தி ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை திண்டிவனம் 2- வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பு அளித்தார்.
அதில் குற்றம் சுமத்தப்பட்ட மதியழகனுக்கு ஆயுள்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.