3 டன் கரும்புகளால் அமைக்கப்பட்ட பாரம்பரிய செங்கரும்பு குடில்
காஞ்சிபுரத்தில் 3 டன் கரும்புகளை கொண்டு பாஜக பிரமுகர் அமைத்துள்ள பாரம்பரிய செங்கரும்பு குடில் காண்போரை கவரும் வகையில் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவராக செயல்பட்டு வருபவர் செந்தில்குமார். பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில், காலமாற்றம் காரணமாக அரசியலில் இடம்பெற்று தனக்கென ஒரு இடத்தில் உள்ளார். விவசாயி என்பதால் விவசாயிகளின் உண்னதத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று விவசாயிகள் உற்பத்தி பொருளாக விளங்கும் செங்கரும்பின் மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்துவார்.
அவ்வகையில் செங்கரும்பில் ஆன பொங்கல் பானை , ஜல்லிக்கட்டு காளைகள் , பாரதப் பிரதமர் மோடி உருவம் என பலவகையில் ஆண்டுதோறும் அமைத்து செயல்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய பொருட்களை அனைவரும் அறிந்து கொள்ளவும் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் விழிப்புணர்வுக்காக சுமார் 3 டன் செங்கரும்பினால் ஆன குடிசை வீடு அமைத்து அதில் பழங்கால பாரம்பரிய பொருட்களான சமையல் உபகரணங்கள், அளவைகள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தவும் திட்டமிட்டு இருந்தார். கடந்த ஒரு வார காலமாகவே இதற்கான முயற்சியில் ஈடுபட்டு இன்று இதனை நிறைவு செய்து நாளை தனது குடும்பத்துடன் செங்கரும்பு குடில் முன்பு கிராமிய முறைப்படி நாளை பொங்கல் இட திட்டமிட்டுள்ளார்.
உழவர்களின் உற்பத்தி பொருளை பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு தேவையான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் பிரதமரின் திட்டங்களில் ஒன்றான அனைவருக்கும் வீடு என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த செங்கரும்பு குடில் பார்க்க அழகான தோற்றத்திலும் பார்ப்பவரை ஒரு நிமிடம் மெய் மறக்க செய்யும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.