டூவீலரில் சென்றவரை இடை மறித்து பணம், செல்போன் வழிப்பறி
கரூரில் டூவீலரில் சென்றவரை இடை மறித்து பணம், செல்போன் வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-05-02 12:06 GMT
டூவீலரில் சென்றவரை இடை மறித்து பணம், செல்போன் வழிப்பறி. இருவர் கைது. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வரவணை அருகே உள்ள சுண்டுகுழி பட்டியை சேர்ந்தவர் அர்ஜுனன் வயது 52. இவர் ஏப்ரல் 27ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் அடுத்த தாந்தோணி மலை பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் தனது டூவீலரில் சுண்டுகுழி பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம், திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள ஏமூர் புதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, இவரை பின்தொடர்ந்து மற்றொரு டூவீலரில் வந்த, காரைக்குடி வேப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் வயது 28, கரூர் தாந்தோணி மலை அருகே முத்துலாடம்பட்டி பகுதியைச் சேர்ந்த தென்னரசு வயது 23 ஆகிய இருவரும் சேர்ந்து, டூவீலரில் சென்ற அர்ஜுனன் வாகனத்தை இடைமறித்து, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூபாய் 2,000-த்தை வழிப்பறி செய்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து அர்ஜுனன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சங்கரலிங்கம் மற்றும் தென்னரசுவை கைது செய்து, அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்த செல்போனையும், ரூபாய் ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.