கல்லூரி வளாகத்தில் பயன்பாடற்று கிடக்கும் வேன்
மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி வேன் பயன்பாடற்று கிடக்கிறது.
Update: 2024-05-07 13:13 GMT
கலை, பண்பாட்டுத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி இயங்குகிறது. மரபு சிற்பம், கட்டடம், ஓவியக் கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவர்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் போக்குவரத்து பயன்பாட்டிற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன், டெம்போ டிராவலர் வேன் வழங்கப்பட்டது. தற்போது வரை, அதற்கு ஓட்டுனர் நியமிக்கப்படவில்லை. துவக்கத்தில், பயண தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுனர் நியமித்து பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் செலவு, டீசல் தேவை கருதி பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. அது, தற்போது கல்லுாரி வளாகத்தில், பல ஆண்டுகளாக ஓரங்கட்டி வைக்கப்பட்டு, துருப்பிடித்து சீரழிந்து வருகிறது. இக்கல்லுாரி, நகர்ப் பகுதியிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள நிலையில், மாணவ - மாணவியர் கல்லுாரி வந்து செல்ல சிரமப்படுகின்றனர். அவர்களின் காலை, மாலை பயண அவசியம் கருதி, வேனை பழுது பார்த்து, துறை சார்பில் ஓட்டுனர் நியமித்து இயக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.