வரைபடத்தில் இருந்து காணாமல் போன கிராமம்
மயிலாடுதுறை மாவட்டம் மாங்கணாம்பட்டு கிராமத்தில் 100 குடியிருப்புகளுக்கு அத்திப்பட்டி கிராமத்தைப் போன்று நில வரைபடத்தில் இருந்து அரசு ஆவணம் காணாமல் போனது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் இக்கிராம மக்கள் அளித்த புகார் மனுவில், மாங்கணாம்பட்டு உட்கிராமத்தில் உள்ள புல எண் 262 சி மற்றும் 262 பி ஆகியவற்றில் 100 குடும்பங்கள் மூதாதையர் காலத்தில் இருந்தே வசித்து வருவதாகவும், அந்த இடங்களுக்கு அனைவரிடம் பத்திரங்கள் உள்ளன.
ஆனால் பட்டா இல்லை. சீர்காழி வட்டாட்சியரிடம் பட்டா கேட்டு விண்ணப்பித்த போது அப்புல எண்களுக்குரிய நில வரைபடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லை என தெரிவித்தாகவும்,
மேலும், இந்த புல எண்களுக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் அடங்கலும் இல்லாததால், இங்கு குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்க முடியவில்லை என கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.
பட்டா இல்லாததால் தங்கள் இடத்துக்கு வங்கிக்கடனோ, அல்லது வாரிசுகளுக்கு உரிமை மாற்றம் உள்ளிட்ட எந்த சொத்து பரிமாற்றமும் செய்யவோ முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ள கிராமமக்கள், 2018-ஆம் ஆண்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்தபோது, பட்டா பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டது விட்டது என்றும் எஃப்எம்பி (நிலவரைபடம்) தொலைந்துவிட்டது என்றும் அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளாக அலைக்கழிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.