களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்; போலீசார் தடையை மீறி பைக் சாகசம்

திருச்சியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், போலீசார் தடையை மீறி இளைஞர்கள் பைக் சாகசம் செய்தனர்.

Update: 2024-01-01 05:49 GMT

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு நேற்று நள்ளிரவோடு முடிவடைந்து, 2024 புத்தாண்டு பிறந்தது. அந்த வகையில் 2024 புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.

புத்தாண்டின் முதல் நாளில் புத்தாடை உடுத்தியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். புத்தாண்டு என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அப்படி ஒரு ஆனந்தம். அது எல்லா வருடமும் எப்போதும் குறையாமல் இருக்கும். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பல்வேறு பகுதிகளில் நட்சத்திர ஓட்டல், மால்களில் நடைபெற்ற ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதன் ஒரு பகுதியாக நீதிமன்றம் அருகே உள்ள மாணவர்கள் சாலை, காவேரி மேம்பாலம், பாரதிதாசன் சாலை, டிவிஎஸ் டோல்கேட், ஜங்ஷன் மேம்பாலம், சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் சாலையில் கூட்டமாக ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர்.

அவர்களது கார் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் அதிக ஒலிகளை எழுப்பி கொண்டு முக்கிய சாலையில் வலம் வந்தனர். இளைஞர்கள் பலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் ‘வீலிங்’ செய்வது, ‘சேஸிங்’ செய்வது, மோட்டார் சைக்கிளின் ‘ஸ்டேண்டை’ தரையில் படும்படி அழுத்தி தீப்பொறி வர வைப்பது, மோட்டார் சைக்கிளில் உள்ள ‘சைலன்சரை’ துளையிட்டு அல்லது அகற்றிவிட்டு அதிக அளவில் ஒலி எழுப்புதல் என பல்வேறு வகைகளில் தங்களது சாகசங்களை செய்தனர். போலீசார் பல்வேறு வகைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி இருந்தாலும் அதையும் மீறி இதுபோன்ற ‘பைக் ரேஸ்’கள் நடத்தப்பட்டன. புத்தாண்டு நாளில் குடி போதை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் அதிவேகமாக சென்ற வாகனங்களின் பதிவு எண்ணை சேகரித்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். கடந்த ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரும் ஆண்டாக இருக்கும் என புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News