வால்பாறை பகுதியில் வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் சாலையில் உலா வந்த காட்டு யானைகள் கூட்டம் சாலையில் நின்றிருந்த வாகன ஓட்டிகளை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.. வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக ஆறுகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி கடந்த சில தினங்களாகவே வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வால்பாறை சுற்றுவட்டார் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது.. குறிப்பாக யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகிறது இந்த யானைகள் இரவு நேரத்தில் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை உடைத்து உள்ளே உள்ள பொருட்களை சூறையாடி சாப்பிட்டு சென்று வருகிறது.. இந்நிலையில் அதேபோல் இன்று வால்பாறை பகுதியில் இருந்து குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலையில் 10.க்கும் மேற்பட்ட யானைகள் குட்டியுடன் உலா வந்துள்ளது. அப்போது அந்த சாலையில் வந்த வாகன ஓட்டிகள் யானைக் கூட்டங்களை கண்டதும் அருகில் வராமல் தூரத்தில் தள்ளி நின்று உள்ளனர். ஆனால் கூட்டத்தில் வந்த ஒரு யானை மட்டும் சாலையில் தூரத்தில் நின்றிருந்த வாகன ஓட்டிகளை கண்டு அவர்களை அச்சுறுத்தும் வகையில் பிளிறிக் கொண்டு துரத்தியுள்ளது.
சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டிகள் யானை அருகே வருவதற்கு முன்பே அப்பகுதியில் இருந்து வாகனத்தை திருப்பிச் சென்றுள்ளனர்.. இதை அவ்வழியில் வந்த மற்றொரு வாகன ஓட்டி தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதால் சாலையில் நின்றிருந்த வாகன ஓட்டிகளை யானை ஆக்ரோசமாக துரத்தும் வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் யானைகள் குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை முகாமிட்டுள்ளதால் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர் மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்..