ஆத்தூர் : தனியார் வணிக வளாக குடியிருப்பில் அழுகிய நிலையில் பட்டதாரி உடல் மீட்பு....
ஆத்தூர் உடையார்பாளையத்தில் தனியார் வணிக வளாக குடியிருப்பு பகுதியில் இரண்டு ஆண்டுகளாக தங்கி இருந்த ஸ்ரீதர் என்ற பட்டதாரி அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டு ஆத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 07:34 GMT
பட்டதாரி உடல் மீட்பு
சேலம், கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த, மனோகரன் மகன் ஸ்ரீதர், 39. எம்.காம்., படித்துவிட்டு சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார். அதன்பின், அங்கிருந்து சேலம் வந்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன் விவகாரத்து பெற்றார். பெற்றோரும் இல்லாத நிலையில், அமெரிக்காவில் வேலை செய்து வரும் அவரது அண்ணன் பாலாஜி, ஸ்ரீதருக்கு மாதம் தோறும் பணம் அனுப்பி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆத்துார், காந்தி நகரில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். சுகர், பிரஷர் நோய் பாதிப்பில் இருந்த அவர், வேறு வேலைக்கு செல்லாமல் அண்ணன் அனுப்பும் பணத்தை செலவு செய்து கொண்டு, அறையில் இருந்து வந்துள்ளார். இன்று, அவர் வசித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலறிந்த ஆத்தூர் டவுன் போலீசார், வீட்டிற்கு சென்றபோது, உள்தாழிட்டது தெரியவந்தது. வீட்டின் கதவை உடைத்துச் சென்றபோது, அழுகிய நிலையில் ஸ்ரீதர் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத சோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஸ்ரீதர் சுகர், பிரஷர் உள்ளதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன், இறந்திருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பட்டதாரி இறப்பு குறித்து, ஆத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.