கனரக வாகனங்களால் விபத்து - எஸ்பியிடம் விஎச்பி,பாஜக புகார்
புத்தேரி பகுதியில் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஎச்பி மற்றும் பாஜக நிர்வாகிகள் எஸ்பியிடம் மனு அளித்தனர்.
விஸ்வ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன், பா.ஜ. மாவட்ட பொது செயலாளர் ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் புத்தேரி ஊராட்சி பகுதியில் முழுமையடையாத நான்கு வழிச்சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. மாவட்ட நிர்வாகம் அறிவித்த நேர கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றுவதில்லை.
திருவனந்தபுரத்தில் இருந்து வரும் டாரஸ் லாரிகள், கனரக வாகனங்கள் இறச்சக்குளம், துவரங்காடு வழியாக தான் திருநெல்வேலி மார்க்கத்துக்கு செல்ல வேண்டும். ஆனால் இந்த வாகனங்கள் இறச்சக்குளம், புத்தேரி வந்து நான்கு வழிச்சாலை அப்டா மார்க்கெட் வருகின்றன. இதனால் நெருக்கடியும், விபத்துக்களும் அதிகரித்துள்ளன. உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. தொடர் விபத்துக்கள் நடந்தும் அந்த பகுதியில் டிராபிக் போலீசார் யாரும் நியமிக்கப்பட வில்லை. எனவே விபத்துக்களை தடுக்க காவல் துறையினர் நியமிக்கப்பட வேண்டும்.மேலும் டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி உள்ளனர்.