பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை!

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-05 12:00 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013 அமலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் பேசுகையில் தூய்மை பணியாளர்கள் நல ஆணையம் என்பது தூய்மை பணியாளர்களின் குறைகளை கண்டறிந்து நிறைவேற்றுவது மட்டுமல்ல அவர்களது வாழ்வியலை உயர்த்துவதே இதன் முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும் என்று பாரத பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆணையம் தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை வசதி, ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றி தரப்பட வேண்டும் என்பதை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். ஆய்விற்கு செல்லும் போது தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகளில் தங்கி ஆய்வு மேற்கொண்டு, தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து 100 சதவிகிதம் தீர்வு காண வேண்டும். அவர்களது வீடு, குழந்தைகள் கல்வி, குடியிருப்பு பகுதியில் குடிநீர், மின்சாரம் வசதிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசு தூய்மைப் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்ற இவ்வாணையத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருவதையும், நேரடியாக வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறதா? என்பதையும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

மேலும், அவர்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் சுயத்தொழில் தொடங்க அரசு கடனுதவி வழங்குகிறது. தூய்மை பணியாளர்களின் மீது தனி கவனம் செலுத்தி, அரசின் திட்டங்கள் அனைத்தும் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு இந்த ஆணையத்தால் கோரிக்கையை கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்களுக்கான பி.எப் போன்றவை முறையாக பிடித்தம் செய்யப்படுவது குறித்து தகவல் அளிக்க வேண்டும்.

ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், கையுறைகள், மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும். இதில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, நாமக்கல் நகராட்சி, முதலைப்பட்டியில் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா. வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். குடியிருப்பு பகுதியில் தூய்மை பணியாளர்களின் இல்லங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், வருங்கால வைப்பு நிதி குறித்த குறுஞ்செய்தி கைபேசிக்கு வருகிறதா என்பது குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கே.சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் அ.ராஜ்மோகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் க.பூங்கொடி, வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பார்த்தீபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) ச.பாலாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், மாவட்ட மேலாளர் தாட்கோ பா.ராமசாமி, அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News